Thursday, July 10, 2008

ஆரடித்தார் ஏனழுதாய்?

ஆரடித்தார் ஏனழுதாய் அடித்தாரைச் சொல்லி அழு
கண்ணே என் கண்மணியே கடிந்தாரைச் சொல்லி அழு
விளக்கிலிட்ட வெணையைப் போல் வெந்துருகி நிற்கையிலே
கலத்திலிட்ட சோறது போல் கண்கலக்கம் தீர்த்தாயே

கொப்புக் கனியே கோதுபடா மாங்கனியே
ஏனழுதாய் என்னுயிரே ஏலம்பூ வாய் நோக
பாலுக்கழுதாயோ பவழ வாய் முத்துதிர
தேனுக்கழுதாயோ கனிவாயில் தேனூற

வம்புக்கழுதாயோ வாயெல்லாம் பால் வடிய
அத்தை அடித்தாளோ அல்லி மலர்த் தண்டாலே
மாமன் அடித்தானோ மல்லிகைப் பூச் செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு ஆக்கினைகள் செய்து வைப்போம்

கடிந்தாரைச் சொல்லி அழு கைவிலங்கு போட்டு வைப்போம்
தொட்டாரைச் சொல்லி அழு தோள்விலங்கு போட்டு வைப்போம்
மண்ணால் விலங்கு பண்ணித் தண்ணீரிலே போட்டு வைப்போம்
வெண்ணையால் விலங்கு பண்ணி வெய்யிலிலே போட்டு வைப்போம்!

No comments: