Thursday, July 15, 2010

பெருமாள் திருமொழி

திவ்ய பிரபந்த பாசுரம் - குலசேகர ஆழ்வார் ராமனைக் குழந்தையாக பாவித்து தாலாட்டாக பாடியது:

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ!

கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே!
தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!

சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ!

ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!

மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!

தளை அவிழும் நறுங்குஞ்சித் தயரதன் தன் குலமதலாய்!
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்தென் கருமணியே!
இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே! தாலேலோ!

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடைக்குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே!

தாலேலோ

கண்ணே, கண்மணியே
கையமுதே தாலேலோ
பண்ணே, பாடுங்குயிலே
பால்நிலவே தாலேலோ

மயிலே, மாங்கனியே
மரகதமே தாலேலோ
குயிலே, குலக்கொழுந்தே
குண்டுமணியே தாலேலோ.

தேனே, திருவிளக்கே
தீஞ்சுவையே தாலேலோ
மானே, மருக்கொழுந்தே
மாதவமே தாலேலோ.