Sunday, July 27, 2008

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேட்டாத்தான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

திங்க உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேண்டுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரட்டுமா
அப்போ கலகலன்னு சிரிச்சுகிட்டு என்னைப் பாரம்மா

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

கோவம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு
நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோழி மிதிச்சு குஞ்சு முடம் ஆகிவிடாது
உனக்கு கொய்யாப்பழம் பறிச்சுத் தரேன் அழுகக் கூடாது

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

Sunday, July 20, 2008

அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு

அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்

அன்னையை பிள்ளை, பிள்ளையை அன்னை அம்மா என்றே அழைப்பதுண்டு
அன்பின் இயக்கம் பண்பின் முழக்கம் அம்மா என்றொரு சொல்லிலுண்டு
பத்துத்திங்கள் மடி சுமப்பாள் பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
பத்தியம் இருந்து காப்பாள் தன் ரத்தத்தை பாலாக்கி கொடுப்பாள்

அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்

இயற்கை கொடுக்கும் செல்வங்கள் எல்லாம் பொதுவாய் வைத்திட வேண்டும்
இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும் பகிர்ந்தே கொடுத்திட வேண்டும்
ஒருவருக்காக மழை இல்லை ஒருவருக்காக நிலவில்லை
வருவதெல்லாம் அனைவருக்கும் வகுத்தே வைத்தால் வழக்கில்லை

அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்

மொழியும் நாடும் முகத்துக்கு இரண்டு விழிகள் ஆகும் என்று
உணரும் போதுஉனக்கும் எனக்கும் நன்மை என்றும் உண்டு
வாழும் உயிரில் உயர்வும் தாழ்வும் வகுத்து வைப்பது பாவம்
கருணை கொண்ட மனிதர் எல்லாம் கடவுளின் வடிவம் ஆகும்

அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்

Sunday, July 13, 2008

ஆயிரம் காலம் நான்

தாலேலோ தாலேலோ
ஆயிரம் காலம் நான் அரசுக்கு நீர் வார்த்தேன்
தொண்ணுறு காலம் நான் துளசிக்கு நீர் வார்த்தேன்
எண்ணூறு காலம் நான் எருதுக்கு நீர் வார்த்தேன்
என்னரசு கண் வளர நான் நான் என்ன தவம் செய்தேனோ?

காஞ்சி நகர் தனிலே காமாட்சி கோவிலிலே
சன்னதியில் நிற்கையிலே சாமி ரெண்டு கையாலே
சாமி ரெண்டு கையாலே எனக்கு தந்த திரவியமோ
தாலேலோ தாலேலோ

Friday, July 11, 2008

காக்கா காக்கா மை கொண்டா

காக்கா காக்கா மை கொண்டா
காடை குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சை கிளியே பழம் கொண்டா

உத்தம ராஜா என் கண்ணு
பத்தரை மாத்து பசும் பொண்ணு
உள்ளம் மயங்கிட வந்திடுங்க
உடனே எல்லாம் தந்திடுங்க

காக்கா காக்கா மை கொண்டா

கல்லை கையால் தொட மாட்டான்
தொல்லை எதுவும் தர மாட்டான்
சொல்லால் செயலால் உங்களுக்கே
நல்லதை என்றும் செய்திடுவான்
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சை கிளியே பழம் கொண்டா

காக்கா காக்கா மை கொண்டா

சாப்பிட உங்களை கூப்பிடுவான்
சமர்த்தாய் அவனும் நடந்திடுவான்
தோப்பில் துரவில் தூங்காமல்
துடுக்காய் ஓடி வந்திடுங்க
காக்கா காக்கா மை கொண்டா

Thursday, July 10, 2008

ஆரடித்தார் ஏனழுதாய்?

ஆரடித்தார் ஏனழுதாய் அடித்தாரைச் சொல்லி அழு
கண்ணே என் கண்மணியே கடிந்தாரைச் சொல்லி அழு
விளக்கிலிட்ட வெணையைப் போல் வெந்துருகி நிற்கையிலே
கலத்திலிட்ட சோறது போல் கண்கலக்கம் தீர்த்தாயே

கொப்புக் கனியே கோதுபடா மாங்கனியே
ஏனழுதாய் என்னுயிரே ஏலம்பூ வாய் நோக
பாலுக்கழுதாயோ பவழ வாய் முத்துதிர
தேனுக்கழுதாயோ கனிவாயில் தேனூற

வம்புக்கழுதாயோ வாயெல்லாம் பால் வடிய
அத்தை அடித்தாளோ அல்லி மலர்த் தண்டாலே
மாமன் அடித்தானோ மல்லிகைப் பூச் செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு ஆக்கினைகள் செய்து வைப்போம்

கடிந்தாரைச் சொல்லி அழு கைவிலங்கு போட்டு வைப்போம்
தொட்டாரைச் சொல்லி அழு தோள்விலங்கு போட்டு வைப்போம்
மண்ணால் விலங்கு பண்ணித் தண்ணீரிலே போட்டு வைப்போம்
வெண்ணையால் விலங்கு பண்ணி வெய்யிலிலே போட்டு வைப்போம்!

Wednesday, July 9, 2008

அமெரிக்காவில் அப்பாவின் தாலாட்டு

விட்டத்திலே தொட்டில் கட்டி பட்டுக்குட்டி நீ ஆட

கொண்டி ஒண்ணு இல்லையின்னு குறைபட்டேன் சாமி கிட்டே

வானம் என்னும் விட்டம் கட்டி பிறை நிலா கொண்டி தட்டி

தென்றல் என்னும் சேலையிலே தொட்டில் கட்டி தான் போட்டான்

அஞ்சுகமே கண்ணுறங்கு என் அன்னக்கிளி கண்ணுறங்கு


வாத்சல்யம் - கண்ணே நவமணியே

கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே
பூத்த புதுமலரே பொக்கிசமே கண்மணியே கண்வளராய்
ஆராரோ ஆரிரரோ

யார் அடித்து நீ அழுதாய் அழுத கண்ணில் நீர் ததும்ப
பேர் உரைத்தால் நான் பெரு விலங்கு பூட்டிடுவேன்
ஆராரோ ஆரிரரோ

அத்தை அடித்தாளோ உனக்கு அமுதூட்டும் கையாலே
சற்றே மனம் பொறுத்து சந்திரனே கண்வளராய்
ஆராரோ ஆரிரரோ

பாட்டி அடித்தாளோ உனக்கு பால் வார்க்கும் கையாலே
கூப்பிட்டு நான் கேட்பேன் குஞ்சரமே கண்வளராய்
ஆராரோ ஆரிரரோ

மாமி அடித்தாளோ உனக்கு மை தீட்டும் கையாலே
சாமி மனம் பொறுத்து அம்பிகையே கண்வளராய்
ஆராரோ ஆரிரரோ

தமையன் அடித்தானோ உனக்கு தயிரூட்டும் கையாலே
நிமிடம் மனம் பொறுத்து நித்திரை செய் கோமகளே
ஆராரோ ஆரிரரோ

அக்காள் அடித்தாளோ உன்னை அம்மான்மார் வைதாரோ
விக்கவே தேம்புவதேன் வித்தகியே கண்வளராய்
ஆராரோ ஆரிரரோ

பெற்றோர் அடித்தாரோ அறியாமல் செய்தாரோ
எங்கள் ஆரமுதே கண்வளராய்
அழாதே அழாதே எங்கள் இளவரசி
அழாதே அழாதே எங்கள் இளவரசி
தொழுவார் பலர் இருக்க தூயவளே கண்வளராய்
இளவரசி கண்வளராய்
ஆரமுதே கண்வளராய்