கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே
பூத்த புதுமலரே பொக்கிசமே கண்மணியே கண்வளராய்
ஆராரோ ஆரிரரோ
யார் அடித்து நீ அழுதாய் அழுத கண்ணில் நீர் ததும்ப
பேர் உரைத்தால் நான் பெரு விலங்கு பூட்டிடுவேன்
ஆராரோ ஆரிரரோ
அத்தை அடித்தாளோ உனக்கு அமுதூட்டும் கையாலே
சற்றே மனம் பொறுத்து சந்திரனே கண்வளராய்
ஆராரோ ஆரிரரோ
பாட்டி அடித்தாளோ உனக்கு பால் வார்க்கும் கையாலே
கூப்பிட்டு நான் கேட்பேன் குஞ்சரமே கண்வளராய்
ஆராரோ ஆரிரரோ
மாமி அடித்தாளோ உனக்கு மை தீட்டும் கையாலே
சாமி மனம் பொறுத்து அம்பிகையே கண்வளராய்
ஆராரோ ஆரிரரோ
தமையன் அடித்தானோ உனக்கு தயிரூட்டும் கையாலே
நிமிடம் மனம் பொறுத்து நித்திரை செய் கோமகளே
ஆராரோ ஆரிரரோ
அக்காள் அடித்தாளோ உன்னை அம்மான்மார் வைதாரோ
விக்கவே தேம்புவதேன் வித்தகியே கண்வளராய்
ஆராரோ ஆரிரரோ
பெற்றோர் அடித்தாரோ அறியாமல் செய்தாரோ
எங்கள் ஆரமுதே கண்வளராய்
அழாதே அழாதே எங்கள் இளவரசி
அழாதே அழாதே எங்கள் இளவரசி
தொழுவார் பலர் இருக்க தூயவளே கண்வளராய்
இளவரசி கண்வளராய்
ஆரமுதே கண்வளராய்
Wednesday, July 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment